திண்டுக்கல்
செவிலியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
|திண்டுக்கல் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் 2-வது நாளாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல், பழனி பைபாஸ் சாலையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் மனு கொடுக்க வந்தனர். கிராம செவிலியர்களுக்கு பணிச்சுமையை குறைக்க வேண்டும். புதிய இணையதள பதிவு பணிக்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுக்க வந்தனர். ஆனால் சுகாதார துணை இயக்குனர் வரதராஜன், செவிலியர்களிடம் மனு பெறாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அங்கேயே தங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் துணை சுகாதார இயக்குனர் செவிலியர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடாததால் 2-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவி நிர்மலா கூறியதாவது, டேட்டா என்ட்ரி பணியால் செவிலியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மனு அளிக்க வந்த செவிலியர்களை சுகாதார துணை இயக்குனர் சந்திக்க மறுத்து வருகிறார். மேலும் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் எங்களை போராட்டத்தை தடை செய்யும் வகையில் மிரட்டி வருகின்றனர். மேலும் குற்ற குறிப்பாணையை காட்டியும் மிரட்டுகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர் கூறினார். செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் கண்காணிப்பு, தடுப்பூசி உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.