< Back
மாநில செய்திகள்
பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரதம்
மாநில செய்திகள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
6 Jan 2023 4:11 AM IST

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட நர்சுகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 500 தற்காலிக நர்சுகளுக்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட சுகாதார மையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்தது.

மேலும் நர்சுகள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும் அரசு உறுதியளித்தது. ஆனால் நர்சுகள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைத்து நர்சுகளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பரவலாக போராட தொடங்கினார்கள். தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

உண்ணாவிரதம்

அதன்படி, எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று 5-ம் நாளாக நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தலைவர் ரவீந்திரநாத் மற்றும் டாக்டர் சாந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்தில் அ.தி.மு.க.வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் எம்.எல்.ஏ. வுமான டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, வி.என்.ரவி, ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நர்சுகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முறைப்படி நியமனம்

பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் டாக்டர் விஜயபாஸ்கர் பேசும்போது, "கொரோனா நெருக்கடி காலக்கட்டத்தில் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றி மருத்துவ பணியாளர் வாரியம் (எம்.ஆர்.பி.) தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 2 ஆயிரத்து 500 நர்சுகளை நாங்கள் தான் பணி நியமனம் செய்தோம். இரவு, பகலாக தூங்காமல் கொரோனா காலத்தில் நமக்கு உதவி செய்த நர்சுகளுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதுதான் நியாயம். தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி நர்சுகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். இது குறித்து சட்டமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. பகிரங்கமாக கேள்வி எழுப்பும் '' என்றார்.

கட்சிகள் ஆதரவு

இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, அதனை மாலையில் நிறைவு செய்து வைத்தார். தொடர்ந்து சீமான் பேசும்போது '' தமிழ்நாட்டில் தினந்தோறும் ஆசிரியர்கள், டாக்டர்கள், அரசு ஊழியர்கள், நர்சுகள் என அனைவரும் போராடி வருகிறார்கள். ஆனால் ஆளும் அரசாங்கம் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே கொரோனா நேரத்தில் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிய நர்சுகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முன் வர வேண்டும் '' என்றார். மேலும் இந்த போராட்டத்தில் பா.ஜ.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு நர்சுகளுக்கு ஆதரவு கொடுத்தனர்.

10-க்கும் மேற்பட்டோர்

முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட நர்சுகள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்