கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைக்கு பதிலாக பூச்சி மாத்திரை கொடுத்த செவிலியர் - ராணிப்பேட்டையில் பரபரப்பு
|அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு சத்து மாத்திரைகளுக்கு பதிலாக பூச்சி மாத்திரை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு சத்து மாத்திரைகளுக்கு பதிலாக பூச்சி மாத்திரையை மாற்றி வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன். இவரது மனைவி ஜெயப்பிரியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் பரிசோதனைக்காக சென்ற போது, அங்கு அவருக்கு கால்சியம் சத்து மாத்திரைகள் என்று கூறி செவிலியர் சில மாத்திரைகளை வழங்கியுள்ளார்.
அதனை ஜெயப்பிரியா கடந்த 20 நாட்களாக உட்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது குடியிருப்புக்கு அருகே மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றுள்ளது. மாத்திரைகள் தீரும் நிலையில் இருந்ததால், மாத்திரை வழங்க வேண்டுமென்று அந்த மருத்துவ குழுவினரிடம் ஜெயப்பிரியா கேட்டுள்ளார். அப்போது இவை பூச்சி மாத்திரை, கர்ப்பிணி பெண்கள் இதை உட்கொள்ளக்கூடாது என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரியா, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்கு சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டு கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மணிமாறன், அந்த செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததோடு ஜெயப்பிரியாவை சிகிச்சைக்காக வேலூர் அருக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.