< Back
மாநில செய்திகள்
ஆஸ்பத்திரி 5-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை
மாநில செய்திகள்

ஆஸ்பத்திரி 5-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை

தினத்தந்தி
|
8 March 2023 2:39 AM IST

ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி வயலூர் ரோடு குமரன்நகர் பஸ் நிறுத்தம் அருகே ரத்னா மெடிக்கல் சென்டர் என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் அல்லித்துறை சாந்தபுரத்தை சேர்ந்த கூலிதொழிலாளி கருப்பசாமியின் மகள் நிவேதாலட்சுமி (வயது 19) நர்சாக பணியாற்றி வந்தார். நேற்று காலை, அவர் வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்தார்.

அதன்பின் மதியம் 3 மணி அளவில் நிவேதாலட்சுமி ஆஸ்பத்திரியின் 5-வது மாடிக்கு படி வழியாக ஏறி சென்றார். இதைத்தொடர்ந்து அவர் திடீரென்று 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

சாவு

அப்போது அருகில் இருந்த மின்சார கம்பி உடலில் பட்டது. தொடர்ந்து அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட பலர் நிவேதா லட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நிவேதா லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அங்கு நிவேதா லட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். `எங்கள் மகள் தற்கொலை செய்து இருக்கமாட்டாள். அவரது சாவில் சந்தேகம் உள்ளது. அவள் வேலை பார்த்த ரத்னா மெடிக்கல் சென்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காதல் விவகாரம்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, வயலூர் ரோடு பகுதியில் உள்ள ரத்னா மெடிக்கல் சென்டரில் நர்சாக பணியாற்றி வரும் நிவேதாலட்சுமி இங்கு பணிக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் இவர் நேற்று மதியம் 3 மணியளவில் அவர் வேலை செய்யும் மெடிக்கல் சென்டரின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முதல் கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது, என்றனர்.

மேலும் செய்திகள்