திண்டுக்கல்
அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம்
|பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில், அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.
மத்திய அரசு சார்பில், பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்புவதாகவும், வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் பா.ஜ.க. பட்டியல் அணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தை அவர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில், வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சுரேஷ்குமார், கலாமணி, ஒன்றிய தலைவர்கள் கோபால், செந்தில்குமார், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி அம்பேத்கர் சிலையிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். அவர்கள் கொடுத்த மனுவில், பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக ஆண்டுதோறும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில், மத்திய அரசால் ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்துக்கான துணைத்திட்ட நிதி முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. அதன்படி கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் சமத்துவபுரம் என்ற பெயரில் பட்டியல் சமூக நிதி எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 2000-ம் ஆண்டில் ரூ.169 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பட்டியல் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அனைத்து சமுதாயத்துக்கும் இலவச கலர் டிவி வழங்கி செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை பட்டியல் சமூக மக்களுக்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.