< Back
மாநில செய்திகள்
விரலில் மை இருந்தால் தேர்வு கூடங்களில் நுழைய தடையா..? என்.டி.ஏ. விளக்கம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

விரலில் 'மை' இருந்தால் தேர்வு கூடங்களில் நுழைய தடையா..? என்.டி.ஏ. விளக்கம்

தினத்தந்தி
|
10 April 2024 4:53 AM IST

விரலில் மை வைத்திருக்கும் தேர்வர்கள் தேர்வுக் கூடங்களில் நுழைய தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், 100 சதவீதம் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் விதமாகவும் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். அவ்வாறு விரலில் மை வைத்து போட்டித் தேர்வை எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடங்களில் நுழைய தடைவிதிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்திருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.

இதனை தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, இதுதொடர்பாக ஒரு விளக்கத்தையும் வெளியிட்டு இருக்கிறது.

இதுதொடர்பான அந்த விளக்கத்தில், "தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க வருபவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து, விரல்களில் மை வைத்திருந்தால் தேர்வு கூடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவதாக தேசிய தேர்வு முகமைக்கு தகவல்கள் வந்தன. இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. இதுபோன்ற அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல் எதையும் தேசிய தேர்வு முகமை வெளியிடவில்லை. இந்த வதந்திகளுக்கு மாணவர்கள் செவிசாய்க்க வேண்டாம். ஆகவே தேர்வர்கள் தங்களுடைய வாக்குரிமையை செலுத்தலாம். வாக்களிப்பது அவர்களின் தேர்வுக்கான தகுதியை எந்தவிதத்திலும் பாதிக்காது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்