யூ-டியூப் சேனல்களை கட்டுப்படுத்த இதுவே தகுந்த நேரம் - சென்னை ஐகோர்ட்டு
|யூ-டியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுவதாக சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை,
காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரின் நேர்க்காணலை ஒளிபரப்பிய தனியார் யூ-டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் யூ-டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி குமரேஷ் பாபு கூறியதாவது :
"யூ-டியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் அளிக்க வருபவர்களை அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி குமரேஷ் பாபு தெரிவித்தார்.
மேலும், முன் ஜாமீன் மனு மீது ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.