இனி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் - தமிழக அரசு உத்தரவு
|தற்போது நேரடியாக நியமனம் செய்யப்படும் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நியமனம் செய்யலாம் என்று அரசு முடிவெடுத்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) (ஏ.பி.ஆர்.ஓ.) பணியிடங்கள், தமிழ்நாடு பொது சார்நிலைப் பணித் தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கான பணியிடங்களில், நேரடி நியமனம், பணிமாறுதல் மூலம் நியமனம், பதவி உயர்வின் மூலம் நியமனம் என்ற வகையில் நியமனம் நடைபெறுகிறது.
தற்போது நேரடியாக நியமனம் செய்யப்படும் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்யலாம் என்று அரசு முடிவெடுத்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த பதவியில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ அல்லது பிஎஸ்சி பட்டத்தை ஜர்னலிசம், மாஸ் கம்யூனிக்கேசன், மலிடி மீடியா, பப்ளிக் ரிலேசன், விளம்பரம், விஷுவல் கம்யூனிக்கேசன், மீடியே சயன்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை படித்திருக்க வேண்டும். அல்லது, அந்தப் படிப்பில் முதுநிலை படிப்பும் படித்திருக்கலாம். அல்லது, ஜர்னலிசம் அல்லது மீடியா சயன்ஸ் படிப்பில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த கல்வியை முடித்திருக்கலாம்.
இதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தற்காலிக விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.