'பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும்' - டி.டி.வி.தினகரன்
|பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பரந்தூரில் பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்புகளை மீறி வெளியாகியிருக்கும் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக திரும்பெரும்புதூர் தாலுக்காவில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களின் பெயரில் நிறைவேற்றப்படும் அரசுத் திட்டங்களை நிராகரிக்கவும், அதனை எதிர்த்துப் போராடவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையை தொடர்ந்து மறுப்பதோடு, போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்காமல் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 43-வதாக இடம்பெற்றிருக்கும் "விவசாயிகளின் ஒப்புதலின்றி விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுத்து நிறுத்தி விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்" என்ற வாக்குறுதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, விளை நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசே, அதனை அழிக்க மும்முரம் காட்டுவது எந்தவகையில் நியாயம்?
உணவுப் பாதுகாப்பு, நீர்நிலைகள் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது இன்றைய தலையாய கடமையாக இருக்கும் சூழலில், பரந்தூர் விமானநிலையம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை கூட இன்னமும் வெளிவராத சூழலில் அவசரகதியில் நிலத்தை கையகப்படுத்த முற்படுவது ஏன் ?
எனவே, மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்பதை இனியாவது உணர்ந்து பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்புகளை மீறி வெளியாகியிருக்கும் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.