சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு
|சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.542 பிரீமிய தொகையை விவசாயிகள் செலுத்த வருகிற நவம்பர் 15-ந் தேதி கடைசி நாளாகும்.
சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.542 பிரீமிய தொகையை விவசாயிகள் செலுத்த வருகிற நவம்பர் 15-ந் தேதி கடைசி நாளாகும்.
குறுவை பருவம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதால் வரலாற்று சாதனையாக கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவாக 78 ஆயிரத்து 486 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை பருவத்தில் இதுவரை 41 ஆயிரத்து 234 எக்டேரில் அறுவடை பணி நிறைவடைந்துள்ளது.
நடப்பு சம்பா பருவத்தில் தற்போது வரை 11,263 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்கு ஏற்ற நீண்ட மற்றும் மத்திய கால நெல் விதைகள் இதுவரை 667 டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 399 டன் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பயிர் காப்பீட்டுத் திட்டம்
தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 8,653 டன்னும், டி.ஏ.பி. 2,568 டன்னும், பொட்டாஷ் 1,670 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 3,278 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு சம்பா, தாளடி மற்றும் கோடை பருவத்தில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த தஞ்சை 1-வது தொகுப்பில் வரும் வட்டாரங்களுக்கு இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனமும், தஞ்சை 2-வது தொகுப்பில் வரும் வட்டாரங்களுக்கு பியூச்சர் ஜெனராளி இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.36 ஆயிரத்து 100 அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்
விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.542 பிரீமிய தொகையை நவம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுச் சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்கள் காப்பீடு செய்யும் பயிரின் பெயர், கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்பு மற்றும் வங்கி கணக்கு எண்கள் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொண்டு அதற்கான ரசீதை பெற்று கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 15 ஆயிரத்து 527 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.