செங்கல்பட்டு
பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ்
|பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆக்கிரமித்துள்ளதாக நோட்டீஸ்
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், ஜமீன் பல்லாவரம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பல்லாவரம் பெரிய ஏரி நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீட்டிற்கான ஆவணங்கள் ஏதேனும் வைத்திருந்தால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர்
இந்த நிலையில் நேற்று படப்பையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆவணங்களை அளிப்பதற்காக திரண்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் வந்ததால் மனுக்களை பெறுவதற்கு போதிய பொதுப்பணித்துறை அலுவலர்கள் இல்லாததால் நீண்ட வரிசையில் பல மணி நேரம் மக்கள் காத்திருந்து வீட்டிற்கான ஆவணங்களை வழங்கினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 1967 ஆண்டு முதல் நாங்கள் இந்த பகுதியில் வசித்து வருகிறோம். எங்களிடம் அனைத்து ஆதரங்களும் உள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்பு குறித்து காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
பரபரப்பு
50 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் குடியிருக்கும் பகுதியில் மாடி வீடு கட்டுவதற்கும் மற்றும் 2 அடுக்கு வீடுகள் கட்டுவதற்கும் தகுந்த ஆதாரங்கள் இருந்ததால் தானே அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்கள். தற்போது ஆக்கிரமிப்பு உள்ளதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும்போது அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காமல் இத்தனை ஆண்டுகள் கழித்து விளக்கம் கேட்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தனர். இதனால் படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.