சேலம்
ஆசிரியர் உள்பட 4 பேருக்கு நோட்டீசு
|சிறையில் இருந்து சோப்பு கடத்த முயன்ற சம்பவத்தில் ஆசிரியர் உள்பட 4 பேருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளதாகவும், விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சூப்பிரண்டு வினோத் கூறினார்.
சிறையில் இருந்து சோப்பு கடத்த முயன்ற சம்பவத்தில் ஆசிரியர் உள்பட 4 பேருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளதாகவும், விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சூப்பிரண்டு வினோத் கூறினார்.
குளியல் சோப்பு
சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு வாரம் ஒரு முறை குளியல் சோப்பு வழங்கப்படும். இதற்காக மொத்தமாக சோப்புகள் வாங்கி சிறையில் வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் சிறையில் குப்பைகளை அள்ளிக்கொண்டு ஒரு லாரி வெளியில் வந்தது.
சிறை நுழைவு வாசலில் பாதுகாப்பில் இருந்த சிறை வார்டர் லாரியை சோதனை நடத்திய போது அதில் டிரைவர் இருக்கையின் அடியில் ஒரு பெட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்த போது குளியல் சோப்புகள் இருந்தது தெரிய வந்தது.
கடத்த முயற்சி
இதுகுறித்து சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்த சோப்புகள் லாரியில் டிரைவர் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளக்கம் கேட்டு நோட்டீசு
இதற்கிடையே சோப்பு கடத்த நடந்த முயற்சி தொடர்பாக சிறைத்துறை சூப்பிரண்டு வினோத்திடம் கேட்ட போது, சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த 75 குளியல் சோப்புகள் அடங்கிய பெட்டியை குப்பை லாரியில் இருந்து வெளியில் எடுத்து செல்ல முயன்ற போது பிடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் சிறையில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியர், லாரி டிரைவர், சிறை காவலர், உணவு கிடங்கு சிறை காவலர் ஆகிய 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளன. அவர்களது கடிதம் கிடைக்க பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.