திருச்சி
திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தேர்வு நெறியாளர் உள்பட 21 பேருக்கு நோட்டீஸ்
|திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தேர்வு நெறியாளர் உள்பட 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 31-ந்தேதி காலாவதியானது. ஆனால் அதற்கு 6 மாதங்கள் முன்னதாகவே தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருக்க வேண்டும். அப்போது கொரோனா காலம் என்பதால் கல்லூரி தேர்வு நெறிக்குழுவினர் அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்க தவறியதாக தெரிகிறது. தற்போது கல்லூரி சார்பில் தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பம் இதுவரை பரிசீலனையில்தான் உள்ளது.
இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து, இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிக்கும் பணிகளில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி கல்லூரியின் அன்றைய தேர்வு நெறியாளர் வாசுதேவன், துணை தேர்வு நெறியாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட 21 பேரிடம் விளக்கம் கேட்டு தற்போதைய கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி நோட்டீஸ் (மெமோ) வழங்கியுள்ளார். மேலும், தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக, அனைத்து பணி நாட்களிலும் பேராசிரியர்கள் அனைவரும் மாலை 4.30 மணி வரை, (கூடுதலாக 2 மணி நேரம்) கட்டாயமாக கல்லூரியில் இருக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதற்காக தனி வருகைப்பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.