கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுமென அறிவிப்பு
|கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மறுநாளில் இருந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை இதுவரையில் அனைவரும் இலவசமாக பார்வையிட்டு சென்றனர்.
இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதில் உள்நாட்டினை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படும். வெளிநாட்டை சேர்ந்த சிறியவர்களுக்கு தலா ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.