மதுரை
ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதம்; ஒப்பந்தகாரருக்கு நோட்டீசு
|ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதம் ஆவதால் ஒப்பந்த காரருக்கு நோட்டீசு அனுப்ப மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மதுரை,
ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதம் ஆவதால் ஒப்பந்த காரருக்கு நோட்டீசு அனுப்ப மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடுப்பு சுவர்
மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி செலவில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதன்படி பழசந்தை அமைத்தல், பெரியார் பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம் அருகில் சுற்றுலா பயணிகள் வருகை மையம், பெரியார் பஸ் நிலையத்தில் வணிக வளாகம், குன்னத்தூர் சத்திரம், பாரம்பரிய நடைபாதை பணிகள், ஜான்சிராணி பூங்கா பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை மையம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், நான்கு சித்திரை வீதிகள் கருங்கற்கள் பதிக்கப்பட்ட பணிகள், வைகை ஆற்றில் கரையோர பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைத்தல் மற்றும் சாலை விரிவாக்கப்பணிகள்.
தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் கட்டுதல், அறிவுசார் மையம் கட்டுமான பணிகள், புராதன சின்னங் களை மேம்படுத்துதல், திருமலை நாயக்கர் மகால் புனரமைப்பு பணிகள், வண்டியூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், நுண்ணுயிர் உரக்கூடம் செயலாக்கம் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதில் பல பணிகள் குறிப்பிட்ட கால அளவை தாண்டி இன்னும் முடிவு பெறாமல் உள்ளது.
வருவாய் இழப்பு
குறிப்பாக தமுக்கம் மைதானத்தில் ரூ.47 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலாசார மைய பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் முடிவு பெற்று இருக்க வேண்டும். அதே போல் மீனாட்சி அம்மன் கோவில் அருகே கட்டப்பட்டு பல்லடுக்கு வாகன நிறுத்துமிட பணிகளும் முடிந்து இருக்க வேண்டும். இந்த 2 பணிகளையும் ஒரே ஒப்பந்தகாரர் தான் செய்து வருகிறார். தமுக்கம் மைதான கலாச்சார மைய கட்டுமான பணி முடிவடையாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் கட்டப் பட்டுள்ள கடைகள் ஏலம் விடப்பட்டு இன்னும் திறக்க படாமல் உள்ளது. கட்டுமான தாமதத்தால் மாநகராட்சியின் வருவாய் தடைப்பட்டு உள்ளது. எனவே இந்த பணிகளை மேற்குகொள்ளும் ஒப்பந்தகாரருக்கு மாநகராட்சி சார்பில் பல முறை எச்சரிக்கை நோட்டீசு அனுப்பியும், அவர் பணியினை துரிதப்படுத்த வில்லை.
நோட்டீசு
எனவே இந்த முறை அவருக்கு அபராதத்துடன் நோட்டீசு அனுப்ப மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. அதன்பின்னும் ஒப்பந்ததாரர் பணிகளை வேகப்படுத்த வில்லையென்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.