தஞ்சாவூர்
திராவிட மாடல் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை
|திராவிட மாடல் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை
திராவிட மாடல் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.
ஆலோசனைக்கூட்டம்
தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்றுமாலை நடந்தது. இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னான் எம்.பி. பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், சேகர், ரத்தினசாமி, ராம.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் வரவேற்றார். கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி
அ.தி.மு.க. ஆட்சி 10 ஆண்டுகள் தொடர்ந்து தமிழகத்தில் நடந்தது. அ.தி.மு.க. சிதறி போக வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் வலுவாக நின்று அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி தான்.
திராவிட மாடல் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழாவை மட்டுமே நடத்தி கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை நிறுத்திவிட்டனர். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சேவை வரி உயர்வு உள்ளிட்ட வரிகளை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலைஉயர்வு மக்களிடத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 9-ந் தேதி பேரூராட்சிகளிலும், 13-ந் தேதி மாநகராட்சி, நகராட்சிகளிலும், 14-ந் தேதி ஒன்றியங்களிலும் தி.மு.க. அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மக்கள் எல்லோருக்கும் தெரியும் வகையில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தை வடிவமைக்க வேண்டும். இது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்ய வேண்டிய கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதா நினைவு தினம்
கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும். இன்று (திங்கட்கிழமை) மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது சிலைகள், உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஏழை, எளிய மக்களுக்கும், முதியோர்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் அய்யப்பன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர, பகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.