வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ரூபாய் நோட்டு சேவைகளை வங்கிக் கிளைகளில் பொதுமக்களும் பெறலாம் - இந்திய ரிசர்வ் வங்கி
|ரூபாய் நோட்டு தொடர்பான சேவைகளை வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பொலிவிழக்கும் நோட்டுகள்
ஏழை என்றாலும் சரி, பணக்காரர் என்றாலும் சரி, ஒவ்வொருவருமே தினமும் கையாளும் பொருள்களில் முக்கியமானது ரூபாய் நோட்டுகளாகும். பலர் கை மாறும் ரூபாய் நோட்டுகள் விரைவில் 'பளிச்' என்ற பொலிவை இழந்துவிடுகின்றன. நாட்கள் செல்லச் செல்ல அவை அழுக்கடைவதும், கிழிந்து விடுவதுமாக ஆகிவிடுகின்றன. ஒரு கட்டத்தில் அவை செல்லாத ரூபாய் நோட்டுகள் என்ற நிலையை அடைகின்றன.
இந்த செல்லாத நோட்டுகளை அல்லது கிழிந்து சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்வதற்கான வசதிகளை பொதுமக்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி செய்து அளித்துள்ளது. அதற்கான விதிமுறைகளையும் வகுத்தளித்துள்ளது.
தனித்தனி விதிகள்
ஒரு காலகட்டத்தில், ரூபாய் நோட்டில் உள்ள எண்களை வைத்து புது நோட்டுகளை வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். ரூபாய் நோட்டுக்கு என்ன ஆனாலும் சரி, எண்கள் சேதமடைந்திருக்கக்கூடாது. ஆனால் சேதம் என்பது எண்களை கவனித்து வருவதில்லை. தீ படுவது, கரையான் அரிப்பது போன்றவை ரூபாய் நோட்டுகளின் எண்களோடு எந்தப் பகுதியையும் அழித்துவிடுகின்றன.
இதைக் கருதி, ரூபாய் நோட்டுகளை மாற்றும் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி திருத்தி அமைத்தது. அதன்படி, சேதமான ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, சேதத்தினால் அழிந்து மீதமுள்ள அந்த நோட்டின் அளவோடு கணக்கிட்டு மதிப்பிடப்படுகிறது. அப்படி கணக்கிடப்படும் மதிப்பின் அளவின்படி சேதமான ரூபாய் நோட்டுக்கு பதிலாக மாற்று ரூபாய் நோட்டு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ரூ.1 முதல் ரூ.20 வரையான நோட்டுகளுக்கு தனி விதிகளும், ரூ.50 முதல் ரூ.2 ஆயிரம் வரையான நோட்டுகளுக்கு தனி விதிகளும் வகுத்தளிக்கப்பட்டுள்ளன.
எவ்வளவு கிடைக்கும்?
உதாரணமாக, 20 ரூபாய் நோட்டின் (பழையது) நீளம் 14.7 செ.மீ.யாகவும், அகலம் 6.3 செ.மீ.யாகவும் உள்ளது. இந்த 2 அளவுகளையும் பெருக்கினால் வரும் பரப்பளவு 92.61 ஆகும். இந்த மொத்த பரப்பளவில் சிதைந்து போகாத பரப்பளவு 50 சதவீதத்திற்கு மேலாக இருந்தால் (அதாவது 47 என்ற பரப்பளவுக்கு மேலாக), அந்த சிதைந்து போன 20 ரூபாய் நோட்டுக்கு மாற்றாக மற்றொரு புதிய 20 ரூபாய் நோட்டை வழங்க வேண்டும். ஆனால் சிதைந்து போகாத பரப்பளவு 50 சதவீதத்தைவிட குறைவாக காணப்பட்டால், புதிய ரூபாய் நோட்டு கேட்டவரின் கோரிக்கையை நிராகரிக்கலாம்.
50 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையிலான நோட்டுகளைப் பொறுத்தவரை, சேதமடையாத பகுதியின் அளவு 80 சதவீதத்திற்கும் மேலாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டுக்கு பதிலாக அதே மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டை வழங்க வேண்டும்.
அதுபோல ரூபாய் நோட்டின் சேதமடைந்த பகுதியும், சேதமடையாத பகுதியும் 40 சதவீதத்துக்கு மேல் அல்லது 50 சதவீதம் என்ற சம அளவில் இருந்தாலும், அதே மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டை வழங்க வேண்டும்.
சேதமடையாத பகுதியின் அளவு 40 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை இடைப்பட்டதாக இருந்தால், அந்த ரூபாய் நோட்டின் மதிப்பில் பாதி மதிப்புக்கான ரூபாயை வழங்கலாம். சேதமடையாத பகுதி 40 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில் வேறு ரூபாய் நோட்டு கேட்கும் கோரிக்கையை நிராகரிக்கலாம்.
வங்கிகளுக்கு சுற்றறிக்கை
பொதுவாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கும், பொதுமக்களுக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனாலும் சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், சிதைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதி, சில்லரை அளிக்கும் வசதி ஆகியவை அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த வசதிகளை, ரிசர்வ் வங்கியின் கீழ் வரும் வங்கிகளின் ஒவ்வொரு கிளையும் வழங்க வேண்டும் என்று அவற்றுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், அனைத்து வங்கிக் கிளைகளும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் அனைத்து வகை சேவைகளை ஆற்ற வேண்டும். என்னென்ன சேவைக்காக ரிசர்வ் வங்கிகளுக்கு வருகிறார்களோ, அந்த சேவைகளை வங்கிக் கிளைகளே வழங்கி, ரிசர்வ் வங்கியை மக்கள் நாடாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதன்படி, புதிய, நல்ல நிலையில் உள்ள ரூபாய் நோட்டுகளை வழங்குவது; அனைத்து வகை ரூபாய் நோட்டுகளுக்கும் சில்லறையாக நாணயங்களை வழங்குவது; சிதைந்த, நைந்துபோன, கிழிந்துபோன ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக நல்ல ரூபாய் நோட்டுகளை வழங்குவது; பணமாற்று போன்ற சேவைக்காக நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வது, போன்ற சேவைகளை வங்கிக் கிளைகளே எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல் அனைத்து வேலை நாட்களிலும் வழங்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வங்கிக் கிளைகள் மூலம் இதுபோன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வை வங்கிகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கான விளம்பரப் பலகைகளை வைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளை மீது நடவடிக்கை
இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கியில் விசாரித்தபோது அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன. அனைத்து வங்கிக் கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் சென்று ரூபாய் நோட்டுகள் தொடர்பான சேவைகளைப் பெற முடியும். பொதுமக்களுக்கு வங்கியின் சேவைகளைப் பற்றிய விழிப்புணர்வு மிகமிக அவசியம்.
அப்படி சேவையை வழங்க எந்த வங்கிக் கிளையாவது மறுத்தால், அதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ள புகாருக்கான பிரிவில் புகாரை அனுப்பலாம். அல்லது, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனருக்கு கடிதம் எழுதலாம். அப்படிப்பட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் அந்த வங்கிக் கிளை மீது விதிப்பதி நடவடிக்கை எடுக்கப்படும்.
எரிந்துவிட்டால்...
தற்போது சென்னையில் உள்ள இந்தியன் ரிசர்வ் வங்கி அலுவலகத்தின் மூலம் மக்களுக்கு ஒரு சேவையை வழங்கி வருகிறோம். விபத்துகளில் ரூபாய் நோட்டுகள் எரிந்துவிட்டாலோ அல்லது கரையானால் அரிக்கப்பட்டுவிட்டாலோ அதுபற்றி ரிசர்வ் வங்கிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இதற்காக தனி குழுவை ரிசர்வ் வங்கி அமைக்கும்.
அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்காக கோரும் நபரை ரிசர்வ் வங்கிக்கு அழைத்து அதிகாரிகள் குழு விசாரிக்கும். சேதமடைந்த ரூபாய் நோட்டுகளோடு வந்து அவர் அதிகாரிகளை சந்தித்து சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.