ராமநாதபுரம்
கசிவுநீர் அல்ல.. தாகம் தீர்க்கும் குடிநீர்
|தொண்டி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தொண்டி,
தொண்டி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
குடிநீர் தட்டுப்பாடு
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காடாங்குடி மற்றும் உசிலனக்கோட்டை கிராமங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் சரியான முறையில் குடிநீர் வினியோகம் நடைபெறாததால் இங்குள்ள மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்துக்கொண்டு தண்ணீரைத் தேடி இக்கிராம மக்கள் அலைந்து திரிந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கிராமத்தின் வழியாக தொண்டி பேரூராட்சிக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் சாலை ஓரங்களில் உடைந்து ஓடுவதால் அதில் கசியும் தண்ணீரை நீண்ட நேரம் காத்திருந்து சேகரித்து பயன்படுத்தி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, எங்கள் கிராமங்களில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படாதால் மிகவும் அவதிப்பட்டு உள்ளோம். சாலையோரம் குழாய் உடைந்து வீணாகும் கசிவுநீர் தான் தற்போது எங்கள் தாகத்தை தணிக்கும் குடிநீராக உள்ளது. அந்த கசிவு நீராவது தாகம் தணிக்குமா என ஆவலுடன் குழாய் உடைந்த பகுதிகளை நோக்கி குடங்களுடன் அலைந்து திரிகிறோம். இந்த குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோரிக்கை
மேலும் காடாங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு போதிய அளவில் குடிநீர் வசதி இல்லாததால் பள்ளி குழந்தைகளும் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என தொடர்ந்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நேரில் புகார் தெரிவித்து வலியுறுத்தியும் இதுநாள் வரை எங்கு குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதாகவும் இங்குள்ள பொது மக்களுக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.