< Back
மாநில செய்திகள்
கல்லூரி வளாகத்தில் ஒரு கழிப்பிடம் கூட இல்லை: நெல்லை சித்த மருத்துவக்கல்லூரியில் மாணவிகள் போராட்டம்
மாநில செய்திகள்

கல்லூரி வளாகத்தில் ஒரு கழிப்பிடம் கூட இல்லை: நெல்லை சித்த மருத்துவக்கல்லூரியில் மாணவிகள் போராட்டம்

தினத்தந்தி
|
7 Nov 2022 1:12 PM IST

நெல்லை சித்த மருத்துவக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

ஆசியாவிலேயே முதல் முறையாக 1964-ம் ஆண்டு அரசு சித்த மருத்துவக்கல்லூரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் சித்த மருத்துவ பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு, சித்த மருத்துவ செவிலியர் பயிற்சி, மருந்தாளுனர் பயிற்சி என சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தினமும் 1,500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

சித்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான 3 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் போதிய இட வசதிகள், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மாணவிகள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவிகளின் விடுதிகளில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததாகவும், அதன் வழியாக மர்மநபர்கள் இரவு நேரத்தில் உள்புகுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சித்த மருத்துவ மாணவ-மாணவிகள் இன்று கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு டீன் சாந்தமரியாள், பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது,

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதியில் வசதிகள் இல்லை. ஒரே அறையில் 7 மாணவிகள் வரை தங்க வேண்டியுள்ளது. இதனால் இடநெருக்கடியும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. விடுதி கட்டிடங்கள் ஆங்காங்கே இடிந்து விழுகின்றன. அச்சத்துடனே இருக்க வேண்டி உள்ளது.இதனால் அடிக்கடி மர்மநபர்கள் விடுதிக்குள் புகுந்து விடுகின்றனர்.

எனவே பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு விடுதி வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கும் போதே மேற்கூரைகள் இடிந்து விழுகிறது.

கல்லூரி வளாகத்தில் ஒரு கழிப்பிடம் கூட இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். எனவே அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடி நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவ-மாணவிகள் கனிமொழி எம்.பி., சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் வந்து கல்லூரியை ஆய்வு செய்து எங்களது பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணவேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

மேலும் செய்திகள்