ஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருத முடியாது - சென்னை ஐகோர்ட்டு கருத்து
|சாதாரண ஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும் சாதாரண ஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர் சலானி என்பவரிடம் வியாபார தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் வெள்ளி விளக்குகள் விற்பனை செய்த வகையில் தனக்கு தரவேண்டிய பாக்கியை தராததால் சலானிக்கு எதிராக ரமேஷ், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தன்னை விசாரிக்க அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், தனது காரின் ஆவணங்களை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டதாக உதவி ஆணையர் லட்சுமணனுக்கு எதிராக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் உதவி ஆணையருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்ததுடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உதவி ஆணையர் லட்சுமணன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் ரமேஷ் எந்த ஒரு மனித உரிமை மீறலுக்கும் ஆளாக்கப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாக கூறி மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் சாதாரணமான ஒவ்வொரு போலீஸ் விசாரணையையும் மனித உரிமை மீறலாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் மேலும் குற்ற வழக்குகள் உரிமைகள் வழக்குகளுக்கான வேறுபாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடிய காவல் துறையினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இது போன்ற வழக்குகளை கையாள்வதற்கு காவல்துறையினருக்கு கூடுதல் விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆரம்ப நிலையிலேயே காவல் துறையினர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தெரிவிப்பது என்பது ஒட்டுமொத்த காவல்துறையினரையும் ஊக்க குறைவுப்படுத்துவதற்கு காரணமாகிவிடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.