< Back
மாநில செய்திகள்
நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது - ஈவிகேஎஸ் இளங்கோவன்
மாநில செய்திகள்

நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தினத்தந்தி
|
21 July 2023 3:45 PM IST

சிவாஜியை விட சிறந்த நடிகர் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை என காங். எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை,

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,

மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி வெளிநாடுகளில் உல்லாசப் பயணம் சென்று தலைவர்களைக் கட்டிப்பிடித்து உற்சாகமாக இருக்கிறார். தற்போது நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. மணிப்பூரில், கலவரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் மோடிக்கு அதுபற்றிய நினைவு வந்திருக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப் பயணம் போவதாகச் சொல்கிறார்கள். நடைப்பயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது. ராகுல்காந்தி கால்நடையாய் சென்று நாடு முழுவதும் மக்களைச் சந்தித்தார். ஆனால், அண்ணாமலை கார் பயணம் செல்ல உள்ளாராம். அந்த பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அண்ணாமலை வெளியிடும் தி.மு.க. பைல்கள் எல்லாமே பெயில் ஆகும். தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் ஒரு கட்சியில், ஒரே தலைவராகவும் ஒரே தொண்டராகவும் இருக்கிற கட்சி ஜி.கே.வாசனுடையது; வீட்டில் இருப்பவர்களே அவருக்கு ஓட்டுப் போடுவார்களா எனத் தெரியவில்லை; வாசனுக்குக் கொஞ்சம் மனசாட்சி இருப்பதால், அவரே அவருக்கு ஓட்டுப் போட மாட்டார். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இதுதான் உதாரணம். இந்த கட்சிகளை எல்லாம் அழைத்து வைத்து கூட்டணி எனச் சொல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்