கோவை விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் வந்த வடமாநில நபர் கைது
|கோவை விமான நிலையத்தில் 2 தோட்டாக்களுடன் வந்த வடமாநில நபர் கைது செய்யபட்டார்.
கோவை,
கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வழக்கம் போல விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்தபோது அதில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்துள்ளது. இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி குண்டு மற்றும் பெட்டியை பறிமுதல் செய்து வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சிங் (42) என்பதும், காண்டிராக்ட் மற்றும் விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது. இவரது சகோதரர் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருவதாகவும், அவரை பார்த்து விட்டு கோவை விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப புறப்பட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் துப்பாக்கி குண்டு பையில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்த போது, அது எப்படி வந்தது என்றே தெரியவில்லை என பதிலளித்துள்ளார். இவரது பையில் துப்பாக்கி குண்டு வந்தது எப்படி? இவரே எடுத்து வந்து விட்டு போலீசில் சிக்கியதால் மாற்றி பதில் அளிக்கிறாரா? அல்லது வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்துவருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.