< Back
மாநில செய்திகள்
கொல்கத்தாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி சென்னையில் விற்பனை - வடமாநில பெண் கைது
மாநில செய்திகள்

கொல்கத்தாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி சென்னையில் விற்பனை - வடமாநில பெண் கைது

தினத்தந்தி
|
11 Jan 2023 8:58 AM IST

கொல்கத்தாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்த வடமாநில பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள்களை விற்பவர்கள் மீது மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் கூடுவாஞ்சேரி, பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திவரப்பட்டு சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கரணை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் கண்காணித்த போது, 10 கிலோ கஞ்சாவுடன் திரிந்த மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த தஸ்லிமா பீவி (வயது 47) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் அவரிடம் கஞ்சா வாங்க வந்த சென்னை ராமாபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (30) என்பவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தஸ்லிமா பீவி உடல் நலக்குறைவால் தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று சென்றுள்ளார். இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்து மருந்துகள் வாங்குவதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு ரெயிலில் வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அசாமை சேர்ந்த புரோக்கர் மூலம் ரெயிலில் கஞ்சாவை சென்னைக்கு அடிக்கடி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதியில் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தஸ்லிமா பீவி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அசோக்குமார் என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்