< Back
மாநில செய்திகள்
வடகிழக்கு பருவமழை: பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை: பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

தினத்தந்தி
|
7 Oct 2022 4:11 AM IST

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

* பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் திறந்தநிலை கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனே அகற்றிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்பு தொட்டிகள் போன்றவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும்.

* ஆபத்தான நிலையிலுள்ள உயர்மின் அழுத்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக அகற்றிடவேண்டும்.

மின் இணைப்புகள் சரியாக உள்ளதா?

* மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் இருக்கிறதா? என்பதை ஆய்வுசெய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவேண்டும்.

* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும், ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதோடு, அதில் நீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

* மழைக்காலம் என்பதால் பள்ளி வளாகத்தில் தேங்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும் என்பதால் வளாகத்தில் தண்ணீர் தேங்காதபடி பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பராமரிக்க வேண்டும்

* பள்ளிகளில் பத்திரப்படுத்தப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள் தரைத்தளத்தில் இருந்தால் மழை நீரினால் சேதம் ஏற்படாதபடி பாதுகாப்பாக வேறு தளங்களில் மாற்றி பராமரிக்க வேண்டும்.

* பலவீனமான மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும்.

* சுகாதாரம் மற்றும் உயிர் பாதுகாப்புக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி மாணவர்களுக்கு வாரந்தோறும் ஒருநாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்