வடகிழக்கு பருவமழை - பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தல்
|வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது.
அதன் படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதன் படி, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முற்றிலும் வலுவிழந்த அரசு கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களை முன்கூட்டியே கள ஆய்வு செய்து அவற்றை அகற்ற வேண்டும் என்றும் திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டிகளையும் மூடவும், மின் இணைப்பு சரியாக உள்ளதை உறுதிப்படுத்தவும், தண்ணீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.