வடகிழக்கு பருவமழை: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள் - பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்
|வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகம் முழுவதும் 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளார்.
சென்னை,
வடகிழக்கு மழை பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நவம்பர் 7-ம் தேதி (நேற்று) பெய்த கனமழையின் காரணமாக 5 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 77 குடிசைகள் சேதமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 72 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியதால் 5-ம் தேதி வரை 2,83,961 உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 816 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 441 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 375 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது.
66 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 226 தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய தினம் ( நவ.7) 28 மாவட்டங்களில் 4.18 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 21.34 மி.மீ. பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 7.11.2022 அன்று திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் நீர் தேக்கத்தில் 20.43 அடி நீர் உள்ளது. 33 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 680 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில் 18.66 அடி நீர் உள்ளது. 84 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது