ஈரோடு
காஞ்சிக்கோவிலில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|காஞ்சிக்கோவிலில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பெருந்துறை
பீகார் மாநிலம் மோனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபால் பஸ்வான். அவருடைய மகன் ரமேஷ் பஸ்வான் (வயது 22). திருமணமான இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் பகுதியில் அவருடைய தம்பி லால் பாபுகுமார் (20) என்பவருடன் தங்கியிருந்து அங்கு இயங்கி வரும் தனியார் மஞ்சள் அரவை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவி சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி ரமேஷ் பஸ்வான் தனது மனைவியிடம் செல்போனில் பேசிவிட்டு, தான் வேலை செய்து வரும் நிறுவனத்தின் நிர்வாகியிடம், ஊருக்கு செல்ல விடுமுறை கேட்டுள்ளார். பின்னர் தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சிலர், நிறுவன சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வேப்பமரம் ஒன்றில் கயிறு மூலம் ரமேஷ் பஸ்வான் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.