ரூ.20 லட்சம் பணத்துடன் சிக்கிய வடமாநில வாலிபர்: ஹவாலா பணமா என விசாரணை
|யானைகவுனியில் போலீசாரின் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி ரூ.20 லட்சம் பணத்துடன் வடமாநில வாலிபர் சிக்கினார். பிடிபட்டது ஹவாலா பணமா? என வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பூர்,
சென்னை யானைகவுனி மின்ட் சாலை பகுதியில் யானைகவுனி போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் கையில் பையுடன் சுற்றித்திரிவதை கண்ட போலீசார் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரிடம் விசாரித்த நிலையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை யானைகவுனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.
உரிய ஆவணங்களின்றி...
இதையடுத்து, பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்ட நபர் சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஸ்வரூப் (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை விசாரித்ததில், தான் நகைக்கடையில் வேலை செய்யும் தொழிலாளி எனவும், நகைக்கடை உரிமையாளர் கூறியபடி ரூ,20 லட்சம் பணத்தை மற்றொரு கடையில் கொடுக்கச் சென்றபோது பிடிபட்டதாக முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும், அவர் கொண்டு வந்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததும் தெரியவந்தது.
வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு
எனவே பிடிபட்ட ரூ.20 லட்சம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் வாலிபரை பணத்துடன் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 3-ந் தேதி நகை வியாபாரிகளிடம் ரூ.1 கோடியே 40 லட்சம் கொள்ளையடித்து செல்லப்பட்ட நிலையில், போலீசார் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி ரூ.20 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தது நகை வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.