கோயம்புத்தூர்
வடமாநில வாலிபர் அடித்து கொலை
|மதுக்கரையில் வடமாநில வாலிபரை அடித்து கொன்ற நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுக்கரையில் வடமாநில வாலிபரை அடித்து கொன்ற நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமாநில வாலிபர்
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 21). இவர் கோவை அருகே மதுக்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
இதற்காக அவர் அந்த நிறுவனத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். அவருடைய அறையில் பீகாரை சேர்ந்த ராகேஷ்குமார் (21), ரோகித்குமார் (21), ரித்தீஷ்சிங் (23), ராஜூலு பகத்சிங் (34) ஆகியோர் தங்கி இருந்தனர். இவர்கள் விடுமுறையில் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.
கட்டையால் தாக்கினர்
அதன்படி 8-ந் தேதி விடுமுறை என்பதால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து அங்குள்ள அறையில் மது குடித்தனர். அப்போது சாகுல் அமீதுக்கும், ராகேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது ராகேஷ்குமாருக்கு ஆதரவாக ரோகித்குமார், ரித்தீஷ்சிங், ராஜூலுபகத்சிங் ஆகியோரும் சேர்ந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து சாகுல் அமீதுவை சரமாரியாக தாக்கினார்கள். இதில் கட்டையில் இருந்த ஆணி குத்தியதில் சாகுல் அமீது தலையில் படுகாயம் ஏற்பட்டது.
பரிதாப சாவு
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுக்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து சாகுல் அமீதை கட்டையால் அடித்து கொலை செய்த ராகேஷ்குமார், ரோகித்குமார், ரித்தீஷ்சிங், ராஜூலு பகத் சிங் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.