< Back
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளி படுகொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளி படுகொலை

தினத்தந்தி
|
22 July 2022 6:00 PM GMT

கீழமணக்குடி அருகே தும்புமில்லில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளியை மது போதையில் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.

தென்தாமரைகுளம்:

கீழமணக்குடி அருகே தும்புமில்லில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளியை மது போதையில் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தும்பு ஆலை

கீழமணக்குடி அருகே உள்ள சித்தன்குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான தனியார் தும்பு ஆலைகள் உள்ளன. இந்தபகுதியில் முகிலன்குடியிருப்பை சேர்ந்த ஸ்ரீவேலன் என்பவருக்கு சொந்தமான தும்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ளூர் மற்றும் பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும், வடமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக தும்பு ஆலையின் வளாகத்தில் ஒரு அறை உள்ளது. இந்த அறையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம், சம்பகாச் பகுதியை சேர்ந்த நானாக் ஷா என்ற முன்னா(வயது 30), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (32) ஆகிய 2 பேரும் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 2 பேரும் அங்கேயே சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம்.

கல்லைப்போட்டு கொலை

இந்தநிலையில் தினமும் காலை 6 மணிக்கு வேலைக்கு வரும் நானாக் ஷா, ரமேஷ் ஆகியோர் நேற்று காலையில் வரவில்லை. இதையடுத்து ஆலையின் காவலாளி செல்வன் அவர்கள் இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அந்த அறையின் கதவில் பூட்டு தொங்கியதை கண்டார். ஆனாலும், அவர் கதவின் இடைவெளி வழியாக பார்த்தபோது உள்ளே ஒருவர் படுத்து இருப்பது தெரிந்தது.

இதனால், கதவை தட்டினார். ஆனால், நீண்ட நேரமாகியும் படுத்திருந்தவர் எழுந்து வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த செல்வன், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, போர்வையால் மூடப்பட்ட நிலையில் நானாக் ஷா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடல் அருகே சிமெண்ட் கல் ஒன்று கிடந்தது. அதை வைத்து நானாக்‌ஷா தலையில் தாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனே, இதுபற்றி ஆலை உரிமையாளருக்கும், தென்தாமரைகுளம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி உதவி சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி (பொறுப்பு), கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி‌ ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து 500 மீட்டர் தூரம் வரை ஓடி கீழமணக்குடி சந்திப்பில் நின்றது.

கொலையாளி மாயம்

ஆனால், அந்த அறையில் நானாக் ஷாவுடன் தங்கியிருந்த ரமேஷ் என்பவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவர் இந்த ஆலையில் வேலைக்கு சேர்ந்து 2 வாரமே ஆகியிருப்பதும் தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று இரவு இருவரும் ஒன்றாக மது குடித்த போது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். நானாக் ஷா தூங்கிய பின் மதுபோதையில் இருந்த ரமேஷ் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட நானாக் ஷா 7 மாதங்களுக்கு முன்புதான் வேலையில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து நானாக்‌ஷா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடிவருகின்றனர்.

தனிப்படை அமைப்பு

மேலும், சித்தன்குடியிருப்பு மற்றும் கீழமணக்குடி பகுதியில் உள்ள தும்பு ஆலைகளில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொழிலாளர்களின் ஆதார் அட்டை மற்றும் அடையாள அட்டைகளை சோதனை செய்து வருகின்றனர்.

நானாக் ஷாவை கொலை செய்த நண்பர் ரமேஷை கைது செய்ய‌ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ரமேஷிடம் செல்போன் இல்லாததால் அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது போலீசுக்கு சிரமமாக உள்ளது.

கொலை செய்யப்பட்ட நானாக் ஷாவுக்கு மீனாதேவி (25) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்