சென்னை
பள்ளிக்கரணையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 7 பேர் கைது
|பள்ளிக்கரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மணிமேகலை 2-வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.அங்கு புரிபவர்கள் அனைவரும் சேர்ந்து மது வாங்கி வந்து குடித்தனர். அப்போது மகேஷ் டோசர் என்ற கட்டிட தொழிலாளி, மேடவாக்கம் பகுதியில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் தங்கி இருக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தனது நண்பர்களான பிஷால், அமர் பாஸ்கர் ஆகியோரை தங்களுடன் மது குடிக்க பள்ளிக்கரணைக்கு வரவழைத்தார். பின்னர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பிஷால், அமர்பாஸ்கர் ஆகியோரை மகேஷ் டோசர் அடித்து விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் மேடவாக்கம் வந்து தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்கரணைக்கு சென்றனர். அங்கிருந்த மகேஷ் டோசரை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மகேஷ் டோசர், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிஷால் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேடவாக்கம் பகுதியில் இருந்த பிஷால் (20), அமர் பாஸ்கர் (21), கோன் கான் (32), ரேகல் ஹால்டா (20), மனஜித் (41) உள்பட 7 பேரை கைது செய்தனர். விசாரணையில், மகேஷ் டோசர் குடிபோதையில் பிஷாலை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அவரது தாயை பற்றியும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிஷால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகேஷ் டோசரை அடித்துக்கொன்றது தெரிந்தது. கைதான 7 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.