< Back
மாநில செய்திகள்
வயலில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வடமாநில வாலிபர் பலி
திருச்சி
மாநில செய்திகள்

வயலில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வடமாநில வாலிபர் பலி

தினத்தந்தி
|
21 Sep 2023 8:55 PM GMT

வயலில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.

உப்பிலியபுரம்:

மின்வேலி

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு விசுவாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 43). விவசாயி. இவர் தனது வயலில் எலித்தொல்லை காரணமாக நேற்று முன்தினம் இரவு மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை வயலுக்குச் சென்ற முருகேசன் மின் இணைப்பை அகற்றிவிட்டு சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றார்.

பின்னர் அவர் மதியம் திரும்பி வந்து பார்த்தபோது மின்வேலியில் சிக்கி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து முருகேசன் போலீஸ் நிலையத்திற்கு சென்று, அது பற்றி தகவல் தெரிவித்து சரணடைந்தார்.

வடமாநில வாலிபர்

அதன்பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பி.மேட்டூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் பணிபுரியும் வடமாநில வாலிபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அரிசி ஆலை நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கைது

விசாரணையில், வடமாநில வாலிபர்கள் 15 பேர் வேலை செய்து வந்தனர். அதில் பீகார் கிழக்கு சாம்பான் மோதிக்காரையை சேர்ந்த ராமேக் பாய் ராயின் மகன் லால்தேவ் ராய்(29) கடந்த 10 நாட்களும் முன்பு அந்த அரிசி ஆலையில் பணிபுரிய சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் அரிசி ஆலை நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளியே சென்றபோது, வயலில் இருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இது பற்றி பீகாரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் முறையான அனுமதியின்றி, சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த முருகேசன் மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்