'வடமாநிலத்தவர்கள் வீட்டில், வங்கியில் கொள்ளையடிக்கின்றனர்... கொஞ்சநாள் பொறுத்திருங்கள்...' - சீமான் எச்சரிக்கை
|வடமாநிலத்தவர்கள் என்று நாகரீகமாக கூறாதீர்கள் 'இந்திகாரன்' என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் கடந்த 10-ந் தேதி கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கதவில் துளை போட்டு 9 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவண்ணாமலையில் நேற்று ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்திரத்துக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான், கொள்ளையடித்தவர்கள் யார் என்று தெரிகிறதா? என்றார். அதற்கு வடமாநிலத்தவர்களாக இருக்ககூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பத்திரிக்கையாளர்கள் கூறினார்.
அதற்கு பதிலளித்த சீமான், இப்போது தெரிகிறதா... வடமாநிலத்தவர்கள் வீட்டில் கொள்ளையடிக்கின்றனர்.. வங்கியில் கொள்ளையடிக்கின்றனர்... நாட்டையும் கொள்ளையடிப்பார்கள்... கொஞ்சநாள் பொறுத்திருங்கள்...
வடமாநிலத்தவர்கள் என்று நாகரீகமாக கூறாதீர்கள் 'இந்திகாரன்'. வடமாநிலத்தவன் எதோ வேறு நாட்டில் இருந்து வரவில்லை' என்றார்.
சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் ஏற்பாடும் சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.