தஞ்சாவூர்
சம்பா, தாளடி நடவுப்பணிகளில் வடமாநில தொழிலாளர்கள்
|கட்டுமான பணி, செங்கல்சூளை, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் டெல்டாமாவட்டங்களில் சம்பா, தாளடி நடவுப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கட்டுமான பணி, செங்கல்சூளை, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் டெல்டாமாவட்டங்களில் சம்பா, தாளடி நடவுப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இதனை டெல்டா மாவட்டங்கள் என்றும் அழைப்பர். இந்த டெல்டா மாவட்டங்களில் ஒரு காலத்தில் விவசாய பணிகள் நடைபெறும் போதும் விவசாய பணிகளில் ஈடுபட்டிருக்கும் விவசாய தொழிலாளர்களின் நாட்டுப்புறப் பாடலும், தெம்மாங்கு பாடலும் சாலையில் செல்வோர்களை மயக்கும்.
ஆனால் இன்று அதன் நிலைமை தலைகீழாக மாறி மொழி தெரியாத ஏதோ ஓசைகள் தான் இப்போது நாம் காதில் கேட்க முடிகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் குறிப்பாக மேற்கு வங்காளம் பகுதிகளை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் இங்கு நாற்று நடவுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள் தரகர் மூலம் இங்கு அழைத்து வரப்பட்டு நாற்று பறிப்பது, நாற்று நடுவது உள்ளிட்ட விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவுப்பணிகளில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு செலவும் குறைகிறது. வேலையும் விரைவாக நடைபெறுகிறது.
மேலும் இந்த பணிகளில் ஈடுபடும் வடமாநில விவசாய தொழிலாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை தான் செவு ஆகிறது. மேலும் ஒரு நபருக்கு 1 படி அரிசி கொடுத்தால் போதுமானது. உள்ளூர் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு வேலைக்கு வந்தால் மறுநாள் வருவதில்லை. மேலும் இவர்கள் வேலை செய்யும் போது விவசாயிகளும் அங்கேயே நிற்க வேண்டி உள்ளது. ஆனால் வடமாநிலத்தவர்களிடம் கொடுத்தால் திறம்பட வேலையை முடித்து கொடுக்கிறார்கள். இதனால் விவசாயிகளும் இதனையே விரும்புகிறார்கள்.
கூலி அதிகம்
இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், தற்போது தங்கள் பகுதிகளில் எந்த வேலையும் கிடையாது. அங்கு ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரை மட்டுமே கூலி கிடைக்கும். மேலும் தொடர்ந்து வேலை இருக்காது. ஆனால் இங்கு தினமும் வேலை உள்ளது. ஒரு நாளைக்கு 500 முதல் 600 வரை அதிகமாக கூலி கிடைப்பதாக கூறுகிறார்கள்.
விவசாயிகள் வரவேற்பு
இது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமார் கூறுகையில், 'உள்ளூர் விவசாய தொழிலாளர்களை ஈடுபடுத்தும் போது நாற்று பறிப்பதற்கு என்று தனியாக கூலி கேட்கிறார்கள். நாற்று நடுவதற்கு தனி. இதனால் ஏக்கருக்கு ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை செலவு ஆகிறது. ஆனால் வடமாநில தொழிலாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மட்டும் கொடுத்தால் போதும். நாற்று பறித்து, அவர்களே நடவு செய்து விடுவார்கள். மேலும் ஒரு நபருக்கு ரேஷன் அரிசி 1 படி கொடுத்தால் போதும். அதனையே அவர்களும் விரும்புகிறார்கள். விளைநிலத்தில் நாங்கள் இருக்க தேவையில்லை. அவர்கள் வேலைகளை கச்சிதமாக முடித்துவிடுவார்கள். இதனால் எங்களுக்கு மனஉளைச்சல் இல்லை. மேலும் அதிகாலையிலேயே வந்து வேலையை முடித்துகொடுக்கிறார்கள். இது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது' என்றார்.