திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்
|திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று பேரிடர் மேலாண்மை துறை சார்பாக வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையருமான ராஜா ராமன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் கூறியதாவது:-
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், தமிழக அரசின் சார்பாக தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாகவும், குறித்த நேரத்தில் பணிகளை விரைந்து முடித்திடவும் நடைபெறும் பணிகள் தரமாக நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்து உரிய காலத்தில் பணிகளை முடிப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சி பணி நிலையிலான அலுவலர்களை கண்காணிப்பாளர்களாக நியமித்துள்ளார்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக என்னை நியமனம் செய்து உள்ளார். ஒவ்வொரு துறையின் அலுவலர்களும் தமிழக அரசால் அறிவிக்கப்படுகின்ற திட்டங்கள் முழுமையாக உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்து பணியாற்ற வேண்டும். அது மட்டும் இல்லாமல் பொதுமக்களில் பயன்பாட்டிற்காக கட்டப்படும் கட்டிடங்கள் தரமானதாகவும், கட்டி முடிக்கப்பட்டு அவைகள் உரிய காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர் ஒவ்வொரு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அவைகளின் நிலை குறித்தும் அனைத்து துறை அலுவலர்களிடமும் கேட்டறிந்து அது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார்.
அதற்கு முன்னதாக திருவள்ளூர் அடுத்த நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து அங்கு இருந்த டாக்டரிடம் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து கூடப்பாக்கம் ஊராட்சி கம்மவார் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் என்னும் எழுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 3-ம் வகுப்புக்கான வகுப்பறையை பார்வையிட்டு ஆய்வு செய்து பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
கூடப்பாக்கம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக சமுதாய பங்களிப்புடன் கூடிய நிதியின் மூலம் புதியதாக அமைக்கப்பட்டுள்ள குளத்தையும், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயா நகர் பகுதியில் கலைஞர் கிராம நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், சப்-கலெக்டர் மகாபாரதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் வித்யா, எபினேசன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.