மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி
|புயல் எச்சரிக்கைக்கு பிறகும் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மெத்தனமாக இருந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் மழைவிட்டு 5 நாட்கள் ஆகியும் இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பாடில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். வேளச்சேரி பகுதியில் வெள்ள நீர் வடிந்துள்ளதால், அந்த பகுதி முழுவதிலும் சாலைகளில் மரக்கிளைகள், குப்பைகள் ஆங்காங்கே குவியல் குவியலாக காட்சி அளிக்கின்றன. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
சென்னை வெள்ள பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புயல் எச்சரிக்கைக்கு பிறகும் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மெத்தனமாக இருந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, பால், குடிநீர், பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கனமழை பெய்தபோது திட்டமிட்டு செயல்பட்டோம். புறநகர் பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றார்.