தேனி
சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைக்கக் கூடாது:ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்:பொதுமக்கள் கருத்து
|ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
ரெயில் பயணம் ஒரு சுகமான அனுபவமாகும். அலுப்பு இருக்காது. பாதுகாப்பானது. கட்டணம் குறைவு. எனவே உள்ளூர் வாசிகள் மட்டும் அல்ல, வெளி மாநிலத்தவர்களும் முதலில் தேர்வு செய்வது ரெயில் பயணத்தைத்தான்.
பஸ்களில் பல சோதனைகளுக்கு இடையே பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் விரும்புவது இல்லை.
அதே நேரத்தில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது சாதாரண காரியமல்ல. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் இடம் கிடைப்பது இல்லை.
பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.
சாத்தியம் இல்லை
அவசரமாக பயணம் செய்பவர்கள் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறைகளை நாடிச்செல்கிறார்கள். ஆனால் அவை சாதாரண மக்களுக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமாவது இல்லை.
எனவே சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையில் ரெயில்களில் வசதிகளை மேம்படுத்துவதுடன் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிப்பதே நல்ல தீர்வாக இருக்க முடியும்.
இதுபற்றி பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
ரெயிலுக்கு 4 பெட்டிகள்
வேல்முருகன் (போடி வர்த்தகர் சங்க தலைவர்) :- ரெயில் பயணங்களை அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்வது இல்லை. அவசரகால பயணங்கள் மேற்கொள்பவர்களும் உண்டு. எனவே, ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அவசியம் தேவை. அதுவும் அதிக எண்ணிக்கையில் தேவை. போடியில் இருந்து சென்னைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) மாதம் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. வாரம் 3 முறை இந்த ரெயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ரெயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும். கட்டாயம் இந்த ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.
ரெங்கநாதன் (தேனி அல்லிநகரம் நீர்வள பாதுகாப்பு சங்க செயலாளர்) :- ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அவசியம் தேவை. தேனி மாவட்டத்துக்கு இயக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறைந்தது 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளாவது இருக்க வேண்டும். இத்தகைய முன்பதிவு இல்லாத பெட்டிகளை சென்னை வரை இயக்க வேண்டும். தேனி மாவட்டத்துக்கு இன்னும் சரக்கு ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இதுவரை சென்னைக்கு இயக்கப்பட உள்ள ரெயிலில் காய்கறிகள், பழங்கள், பூக்களை கொண்டு செல்ல குளிர்பதன வசதியுடன் கூடிய ஒரு பெட்டி இணைக்க வேண்டும். விவசாயிகள் நிறைந்த தேனி மாவட்டத்தில் விளைச்சல் அடையும் விளை பொருட்களை கொண்டு செல்ல அது பேருதவியாக இருக்கும்.
அவசிய தேவை
புவனேஸ்வரி (தலைமை ஆசிரியை, உப்புக்கோட்டை):- ரெயிலில் முன்பதிவு இல்லாத ரெயில்பெட்டிகள் இருந்தால், கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வெளியூர்களில் இருந்து வந்து செல்லவும், விடுமுறை முடிந்து பணியாற்றும் வெளிநகரங்களுக்கு செல்வதற்கும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அவசியம் தேவை. தற்போது தட்கல் டிக்கெட் எடுப்பதில் கூட சிக்கல்கள் உள்ளன. எனவே, சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை குறைக்கக்கூடாது. முன்பதிவு இல்லா பெட்டிகளை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும்.
கவுரி ஆண்டாள் (ஆசிரியை, போடி) :- சென்னை போன்ற நகரங்களுக்கு மருத்துவ சிகிச்சை, பரிசோதனைகளுக்கு செல்லும் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் பஸ்களில் பயணம் செய்யும் போது உடல்ரீதியாக பல்வேறு உபாதைகளை எதிர்கொள்கின்றனர். அதுபோன்றவர்களுக்கு பஸ்களில் செல்வது என்பது அசவுகரியமான பயணமாகவே இருக்கிறது. ரெயில்கள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் கழிப்பறை, படிக்கட்டுகளை அமா்ந்து செல்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் அவதிப்படும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகிறது. எனவே பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் போது முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். தேனி மாவட்டத்துக்கு இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றால் தான் மக்கள் மத்தியில் பயன்பாடு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.