பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது -ஐகோர்ட்டு உத்தரவு
|தெய்வ பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், "அறங்காவலர்கள் நியமனத்தில் அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பத்தில், விண்ணப்பத்தாரர் அரசியல் கட்சியை சேர்ந்தவரா? என்ற கேள்வி இடம் பெறவில்லை. அதனால், அறங்காவலராக நியமிக்கப்படுபவர் அரசியல்வாதியா? என்பது தெரியாமல் போய்விடும்" என்று வாதிடப்பட்டது.
கேள்வி இல்லை
அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், "விண்ணப்பத்தில் அரசியல் கட்சி உறுப்பினரா? இல்லையா? என்ற கேள்வி இடம் பெறும்" என்று உத்தரவாதம் அளித்தார். இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விண்ணப்பத்தில் அரசியல் கட்சி உறுப்பினர் குறித்த விவரங்கள் கொண்ட கேள்விகள் இடம் பெறவில்லையே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை வக்கீல், "கடந்த விசாரணையின்போது, தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை அறங்காவலராக நியமிக்கலாம் என்று இந்த ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது. அதன் காரணமாக அந்த கேள்வியை இடம்பெறச் செய்யவில்லை" என்று விளக்கம் அளித்தார்.
அனுமதிக்க முடியாது
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தெய்வ பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது. அதனால், அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
பின்னர், "அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட அளவில் குழு நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.