நடிகை ரோஜா கணவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் - சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு
|நடிகையும், ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியுமான ரோஜாவின் கணவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் 80, 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ரோஜா ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் உருவான 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
மேலும், ரோஜா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாகவும் இருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல பைனான்சியர் குறித்து சில கருத்துகளை அவதூறாக தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது பைனான்சியர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்தார். வழக்கு தொடுத்த பைனாசியர் இறந்த பின்னர் அவரது மகன் வழக்கை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு விசாரணையின் போது ஆர்.கே. செல்வமணி மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகாத ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தற்போது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமல்லாது இது தொடர்பான வழக்கு செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகையும், ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியுமான ரோஜாவின் கணவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.