ஈரோடு
விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
|விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோபி கோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடத்தூர்
விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோபி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
விபத்தில் பலி
கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகவதி நகரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 80). இவர் கடந்த 30.7.2016 அன்று கள்ளிப்பட்டி சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த பொன்னம்பலம் என்பவாின் மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பிடிவாரண்டு
இதுகுறித்து அப்போதைய பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பான வழக்கு கோபி முதலாம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வருகிற 28-ந் தேதி சாட்சி விசாரணைக்கு ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி உத்தரவிட்டார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தற்போது சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.