ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - ச.ம.க. தலைவர் சரத்குமார் அறிவிப்பு
|ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி சார்பாக காங்கிரஸ், அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ஏகமனதாக தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யம் இறங்கி வேலை செய்யும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் கட்சியின் உயர்மட்ட குழு நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் சரத்குமார் அறிவித்துள்ளார்.