கரூர்
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை
|18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறையின் சார்பில் புகையிலை உபயோக தடுப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய புகையிலை தடை சட்டம் 2003-ன் படி, மருத்துவ நிலையங்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், பொது நூலகங்கள், பஸ் நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், புகைவண்டி நிலையம், திரை அரங்குகள், பணிபுரியும் இடங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலக பொது இடங்களில் யாரும் புகைபிடிக்கக்கூடாது.
விற்பனை செய்யக்கூடாது
18 வயதுக்குட்பட்ட நபர்களிடம் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. தேனீர் கடைகளில் புகையிலை பொருட்களை காட்சிப்படுத்துதல் கூடாது. புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி, 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வது இல்லை ஆகிய பதாகைகளை சுகாதாரத்துறை அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி காட்சிப்படுத்துதல் வேண்டும்.
புகையிலை பொருட்கள் குறித்து விளம்பரப்பலகை வைக்கக்கூடாது. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. கல்வி நிலையங்களை சுற்றி 300 அடி தொலைவில் உள்ள கடைகளில் யாரும் புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.
புகையிலை இல்லா கல்வி நிறுவனம் சான்றிதழ்
புகையிலை தடை சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட மாவட்ட அளவில், வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களால் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி நிறுவனங்கள் 15.06.2023-க்குள் புகையிலை தடை சட்ட விதிகளை அமல்படுத்தி புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்கிற சான்றிதழ் பெற பொது சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு விண்ணப்பித்து, சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து சான்று பெறாத அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவங்களின் பட்டியல் கரூர் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.