ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை.. தொடக்க கல்வி இயக்குனர் விளக்கம்
|அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
சென்னை,
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியானது. போராட்டத்தில் ஈடுபட்ட 19 நாட்களுக்கு சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 19 நாட்கள் விடுமுறையாக கணக்கிடப்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் என்ற தகவலை தெரிவித்த ஒட்டன்சத்திரம் தொடக்கக்கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.