< Back
மாநில செய்திகள்
மோடி போல எந்த பிரதமரும் மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

மோடி போல எந்த பிரதமரும் மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
22 April 2024 5:35 PM GMT

பிரதமர் தனக்கு முன்னாள் இருந்தவர்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பதிவில், "ராஜஸ்தானில் நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் மோடி பேசியது போல் வேறு எந்த பிரதமரும் இவ்வளவு மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதாக என்னால் நினைவு கூறமுடியவில்லை. அவர் கூறிய ஒவ்வொரு வாக்கியமும் முந்தைய வாக்கியத்தை முழுமையான பொய்யிலும், வெட்கக்கேடான கொடுமையிலும் மிஞ்சியதாக உள்ளது.

மக்களின் நிலம், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் எப்போது, எங்கு கூறியது?, தனிநபர்களின் சொத்துக்கள், பெண்கள் வைத்திருக்கும் தங்கம் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு சொந்தமான வெள்ளி ஆகியவற்றை எப்போது, எங்கு மதிப்பிடுவது என்று கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியது?, அரசு ஊழியர்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் பணமும் எப்போது, எங்கு விநியோகிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியது? என்று பா.ஜனதா உலகுக்கு சொல்லுமா?

பிரதமர் தனக்கு முன்னாள் இருந்தவர்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கவேண்டும். மன்மோகன் சிங் டிசம்பர் 2006-ல் தேசிய மேம்பாட்டு கவுன்சிலுக்கு ஆற்றிய உரை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. வளங்கள் மீதான முதல் கோரிக்கை ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் உள்ளது என்று மன்மோகன் சிங் கூறினார். மோடி அவரது வார்த்தைகளை திரித்து பேசுவது அவதூறானது. ஏப்ரல் 21-ந்தேதிக்குப் பிறகு விவாதத்தின் அளவு ஒரு புதிய தாழ்வுக்கு சென்றுவிட்டது. இது ஒரு அவமானம்" என்று அதில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்