திராவிட இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|கி.வீரமணியின் 90-வது பிறந்த நாள் விழாவில், திராவிட இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
90-வது பிறந்த நாள் விழா
திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் கோபண்ணா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு, கி.வீரமணியை பாராட்டி பேசினார்கள்.
மு.க.ஸ்டாலினுக்கு விருது
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோமஇளங்கோவன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முதல் சிறை அனுபவம்
ஆசிரியர் வீரமணியை வீணர்கள் யாரும் வீழ்த்த முடியாது. நூற்றாண்டை கடந்தும் வீரமணிக்கு பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடுவோம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறேன். அதுதான் எனது முதல் சிறை அனுபவம். அப்போது எனக்கு வயது 23.
எனக்கு முன்னதாக ஆசிரியர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். நான் காவலர்களால் பலமாக தாக்கப்படுகிறேன். அப்போது என் மீது விழுந்த பெரும்பாலான அடிகளை தனது உடம்பிலே தாங்கியவர்கள் மறைந்த சிட்டிபாபு மற்றும் ஆசிரியர் வீரமணியும்தான். அந்த சமயத்தில் இன்று இருப்பதைவிட மிகவும் மெலிந்த உருவமாக இருந்தேன்.
கருப்பு சட்டைக்காரர்
அடியை தாங்க உடம்பு மட்டுமல்ல, அடியென்றால் எப்படி இருக்கும் என்பதை அறியாத நிலையில் இருந்தவன். அப்போது என் மீது விழுந்த அடியை தாங்கி மன தைரியத்தை கொடுத்தவர்தான் ஆசிரியர் கி.வீரமணி. தன்னுயிரையும் காத்து, என்னுயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர். தி.மு.க. ஆட்சியின் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல் நடத்தினால் எங்களுக்கு முன்பாகவே அதை தடுக்கக்கூடிய கேடயமாக ஆசிரியர் கி.வீரமணி விளங்கி கொண்டிருக்கிறார்.
எதிரிகள் மீது கொள்கை அம்பு பாய்ச்சும் சொல் வீச்சுக்காரராக செயல்பட்டு வருகிறார். கருணாநிதி மறைவுக்கு பிறகு திக்கற்ற நிலையில் இருந்த நேரத்தில் எனக்கு தைரியத்தை ஊட்டி திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எனக்கு உணர்ச்சியை ஏற்படுத்தி தந்தவர். நாட்டில் நடக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் சுயமரியாதை சுடரொளி காட்டி வழிகாட்டுபவராக கி.வீரமணி செயல்பட்டு வருகிறார்.
போர்க்களம் நோக்கி...
அனைத்து தகுதிகளையும் கொண்ட நடமாடும் பல்கலைக்கழகமாக கி.வீரமணி இருந்து வருகிறார். இந்த பல்கலைக்கழகம் தான் தமிழினத்தின் விடிவெள்ளியாக 90 ஆண்டுகாலம் ஒளிவீசி கொண்டிருக்கிறது. தொடக்கம் முதல் தற்போது வரை போர்க்களம் நோக்கி சென்று கொண்டிருப்பவர்தான் கி.வீரமணி.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை கண்டித்து தற்போது கூட கி.வீரமணி போர்க்களம் கண்டிருக்கிறார்.
அடிக்கட்டுமானத்தை...
குடும்பம் குடும்பமாக இயக்கம் நடத்திய காரணத்தால் இது குடும்ப கொள்கை இயக்கம். குடும்ப பாச இயக்கம். கொள்கையும், லட்சியமும் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பாசமும், அன்பும் இருப்பதால்தான் இந்த திராவிட இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தை யாராலும், எந்த கொம்பாதி கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. இனியும் முடியாது.
திராவிட இயக்கம் என்பது ஒரு கட்சி அல்ல. கொள்கை உணர்வு. அந்த கொள்கை உணர்வு வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த உணர்வை யாராலும் தடுத்துவிட, அழித்துவிட முடியாது.
திராவிட மாடல் ஆட்சி
சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம், இன உரிமை, மொழிப்பற்று ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய திராவிட கொள்கையின் அடையாளமாக கி.வீரமணி விளங்கிக்கொண்டிருக்கிறார். இதை அரசியல் களத்தில் வென்றெடுத்து, தமிழர்களை தன்மானம் உள்ளவர்களாக, அனைத்து உரிமைகளையும் கொண்டவர்களாக ஆக்குவது மட்டுமல்ல, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரக்கூடிய திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
ஒரு சீர்திருத்த இயக்கம் அரசியல் பரிணாமம் பெற்று ஆட்சியை பிடித்து தன் தேசிய கொள்கைகளை நிறைவேற்றும், சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அடைந்தது திராவிட இயக்கத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
வெற்றிமணி ஒலித்திடுக
இத்தகைய பெருமைக்குரிய இயக்கத்தை நடத்தும் ஆசிரியர் கி.வீரமணி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். தி.மு.க. சார்பில், தமிழ்நாட்டு மக்கள் சார்பில், தமிழர்கள் சார்பில் நான் வாழ்த்துகிறேன்.
இன்று நம் தலைவர் கருணாநிதி இருந்திருந்தால், 99 வயதில் உதயசூரியனாய் இந்த மேடையில் காட்சியளித்திருப்பார். 90 வயது ஆசிரியர் கி.வீரமணியை 99 வயது கலைஞர் கருணாநிதி பாராட்டியிருப்பார். இன்றைக்கு அவர் இல்லை. கலைஞர் கருணாநிதியின் மகனாக நான், அவரது சொல்லெடுத்து ஆசிரியர் கி.வீரமணியை வாழ்த்துகிறேன். வீரமணி வென்றிடுக. வெற்றிமணி ஒலித்திடுக.
இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக கி.வீரமணி ஏற்புரை வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், ஆ.ராசா எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கி.வீரமணியின் துணைவியார் மோகனா அம்மாள், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நேரில் வாழ்த்து
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று காலை நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்,