கடலூர்
யாராலும் என்னை வீழ்த்த முடியாது: "வளர்ச்சியை பிடிக்காத துரோகிகளின் கீழ்த்தரமான செயல் இது" பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பேச்சு
|யாராலும் என்னை வீழ்த்த முடியாது என்றும், வளர்ச்சியை பிடிக்காத துரோகிகளின் கீழ்த்தரமான செயல் இது என்றும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசினார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்ற விழாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் நலம் விசாரிப்பதற்காக நேற்று காலை தவுலத் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரண்டனர். உடனே அய்யப்பன் எம்.எல்.ஏ. அவர்கள் மத்தியில் நின்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அவரது வழிகாட்டுதலின் பேரில் மக்களுக்கு எவ்வித துரோகமும் இல்லாமல் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
கீழ்த்தரமான செயல் இது
எனது வளர்ச்சியை பிடிக்காத, பொறுத்துக்கொள்ள முடியாத தீய சக்திகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 2 பேரை பிடித்து விசாரிப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
நான் யாருக்கும் எந்த தவறும் செய்யவில்லை. எனது வளர்ச்சியை பிடிக்காத துரோகிகள், இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யார்? என்று அடையாளம் கண்டு விரைவில் போலீசார் பிடித்து விடுவார்கள்.
துரோகிகளால்
வீழ்த்த முடியாது
மக்களாகிய நீங்கள் இருப்பதால் எனக்கு ஒன்றும் ஆகாது. எந்த துரோகிகளாலும் என்னை வீழ்த்த முடியாது. யாருக்கும் எந்தவித தொந்தரவுகளிலும் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது. இரவு முதல் என்னுடன் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கடலூர் வந்து அய்யப்பன் எம்.எல்.ஏ.வை சந்தித்து நலம் விசாரித்தார்.