பெரம்பலூர்
புதிதாக எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் தொடங்கப்படவில்லை
|பெரம்பலூர் நகராட்சியில், புதிதாக எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் தொடங்கப்படவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
பெரம்பலூர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் அம்பிகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது, நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மராமத்து பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது என்றும், புதிதாக எந்தவொரு மக்கள் நல திட்டங்களும் தொடங்கப்படவில்லை என்றும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கடந்த நகர்மன்ற கூட்டத்தில் தங்களது வார்டுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு களப்பணியாளர்கள் 2 பேரை பரிந்துரை செய்து தருவதாகவும், அவர்களை அந்த பணிக்கு நியமிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனாலும் நகராட்சி நிர்வாகம் அந்த பணிக்கு தன்னிச்சையாக முடிவெடுத்து டெண்டர் மூலம் ஆட்களை நியமித்து உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசினர். மேலும் நகர்மன்ற கூட்டத்தில் தங்கள் பேச்சுக்கு மதிப்பில்லை என்றும் கவுன்சிலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் விவரம் எங்களுக்கு வேண்டும். அவர்களுக்கு தினமும் வழங்கப்படும் ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா?, ஏற்கனவே நகராட்சி தூய்மை காவலர்களுக்கு கலெக்டர் கொடுக்க கூறிய ஊதியம் வழங்கப்படுகிறதா? என்று கவுன்சிலர் ஒருவர் கேள்வி எழுப்பினர். நகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை கூட கவுன்சிலர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற கவுன்சிலர்கள், இனியாவது மக்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து நகர்மன்றம் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2 தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.