பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு
|பொன்முடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு, அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீர்ப்பில், சிறப்பு நீதி மன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் இதில் தலையிட முடியாது. ஆனால் மீண்டும் முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்க இந்த தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது என்றும், தேவைப்பட்டால் சட்டத்திற்குட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.