< Back
மாநில செய்திகள்
சென்னையில் மிக அதிக கனமழை இனி இல்லை...! அடுத்து 19-ந்தேதி தான்
மாநில செய்திகள்

சென்னையில் மிக அதிக கனமழை இனி இல்லை...! அடுத்து 19-ந்தேதி தான்

தினத்தந்தி
|
12 Nov 2022 12:33 PM IST

சென்னையில் மிக அதிக கனமழை இனி இல்லை...! தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்ய தொடங்கியது. இதனால், நேற்று காலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பெரும்பாலானவர்கள் அதிகாலையில் மேற்கொள்ளும் நடைபயிற்சி மற்றும் விளையாட்டுகள் நேற்று தடைபட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கிழக்கு கடற்கரை சாலையில் கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் செம மழை பெய்து வருகிறது. சென்னையின் தென் பகுதியில் அடர்ந்த மேகங்கள் வரிசையாக நிற்கின்றன.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தென் சென்னைக்கு மேகக் கூட்டங்கள் மெதுவாக நகர்கின்றன. இன்று காலை தென் சென்னையில் கனமழை பெய்தது.

மேலும் ஒரு கனமழைக்கு தென் சென்னைக்கு வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கரூக் திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மிக அதிக கனமழை அல்லது அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மயிலாடுதுறை அல்லது கடலூர் மாவட்டத்தை சுற்றி மேகக் கூட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அடுத்த இரு தினங்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பதத்தால் மழை பெய்யும். அதிலும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும். இன்று தென் சென்னையில் தீவிர மழை பெய்தது. வரும் 14 ஆம் தேதி வரை விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்து வரும் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம் தமிழக கடலோரத்தில் உருவாகிறது. இன்று பல இடங்களில் வெயில் உச்சம் பெறும். அங்கும் இங்குமாக திடீர் மழை பெய்யும். இதே நிலை நாளையும் தொடரும். மேற்கு தமிழகத்தை பொருத்தமட்டில் திருப்பூர்- கரூர்- நாமக்கல் பகுதிகளில் அரிதாக கனழை பெய்யும்.

கனமழை மூலம் வடசென்னையை முறியடித்தது தென் சென்னை. அடையாறில் 78 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, ஆவடியில் கனமழை பெய்துள்ளது. பெரம்பலூர், விழுப்புரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேர்களில் மழை பெய்யும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்