காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை - தமிழக அரசு
|பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர், வேளாண் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக அரசு உரிமம் வழங்காததால் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை என்றும் கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் மேம்பாட்டு சட்டத்தை தமிழக அரசு இயறியிருக்கிறது. அந்த சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.